நடப்பு நிகழ்வுகள் 28-29 ஜனவரி 2019
இந்தியா
- டில்லியில் நடந்த குடியரசு தின விழாவின்போது, வாகன கண்காட்சி அணிவகுப்பில், மாநிலங்களுக்கான பிரிவில், சிறப்பான காட்சி அமைப்புக்கான முதல் பரிசு, திரிபுராவுக்கு கிடைத்துள்ளது. காந்திய வழியில் ஊரக பொருளாதாரம் குறித்து விளக்கும் வகையில், திரிபுரா மாநில வாகனத்தில் காட்சி அமைப்பு இருந்தது.
- குடியரசுத் தினம் 2019 வாகன கண்காட்சி அணிவகுப்பில் ‘இந்திய வேளாண்மை ஆராய்ச்சி கவுண்சிலின்’ (Indian Council of Agricultural Research (ICAR) ) , ‘கிஷான் காந்தி’ (Kisan Gandhi) எனப்படும் வாகனக் கண்காட்சிக்கு முதல் பரிசு வழங்கப்பட்டுள்ளது.
- ’தேசிய மாண்புமிக்க கல்வி நிறுவனங்கள் பட்டியலை’ ( Institutions Of Eminence ) 20 லிருந்து 30 ஆக உயர்த்துவதற்காக நிபுணர்களின் குழு மத்திய மனித வள மேம்பாட்டு அமைச்சகத்திற்கு பரிந்துரைத்துள்ளது. சென்ற ஆண்டில் (2018) 19 கல்வி நிறுவனங்களுக்கு மாண்புமிக்க கல்வி நிறுவனங்கள் தகுதி வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இத்தகுதியைப் பெறும் அரசு கல்வி நிறுவனங்களுக்கு ரூ.1000 கோடி நிதிக்கொடையும், தனியார் கல்வி நிறுவனங்களுக்கு கல்வி கட்டணங்களை விதிப்பதிலுள்ள கட்டுபாடு விலக்கும் வழங்கப்படுகிறது குறிப்பிடத்தக்கது.
- ’அடல் சேது பாலம்’ (‘Atal Setu’ Bridge) என்ற பெயரில் 1 கி.மீ. கேபிள் பாலம் கோவாவின் பானாஜியில் மண்டோபி ஆற்றின் குறுக்கே திறந்து வைக்கப்பட்டுள்ளது. இந்த பாலம் முன்னாள் பிரதமர் அடல்பிகாரி வாஜ்பாயின் நினைவில் பெயர்சூட்டப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
- நாட்டின் தூய்மையான இரயில்வே மண்டலங்களில் முதலிடத்தை தென்னக இரயில்வே பெற்றுள்ளது.
- ”பரிக்ஷா பி சார்ச்சா 2.0” (Pariksha Pe Charcha 2.0) என்ற பெயரில் மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் பிரதமர் மோடி அவர்களுடன் தேர்வுகளை மற்றும் அவற்றின் மூலம் ஏற்படும் மன அழுத்தங்களை எதிர்கொள்வதற்கான வழிமுறைகளைப் பற்றி விவாதிக்கும் நிகழ்வு 29-1-2019 அன்று புது தில்லியில் நடைபெறவுள்ளது. இந்நிகழ்வில் இந்தியா மற்றும் வெளிநாடுவாழ் இந்தியர்கள் என 2000 மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் கலந்து கொள்கின்றனர்.
- ஒருங்கிணைந்த எண்ணெய் சுத்திகரிப்பு விரிவாக்கத் திட்ட வளாகம் (ஐ.ஆர்.ஈ.பி) கேரளாவில் உள்ள கொச்சியில் பிரதமர் மோடி அவர்களால் 27 ஜனவரி 2019 அன்று நாட்டிற்கு அர்ப்பணிக்கப்பட்டது.
- பொது தரவுகள் ஒழுங்குமுறை தயார்நிலை பட்டியல் 2019 (General Data Protection Regulation (GDPR) readiness index) ல் இந்தியா 5 வது இடத்தைப் பெற்றுள்ளது. இந்த பட்டியலை CISCO நிறுவனம் வெளியிட்டுள்ளது.
- ’யுவ சுவாபிமான் யோஜனா’ (Yuva Swabhiman Yojana) என்ற பெயரில் பொருளாதாரத்தில் நலிவடைந்த நகர்புற இளைஞர்களுக்கான 100 நாள் வேலை வாய்ப்புத் திட்டத்தை மத்திய பிரதேச மாநில அரசு தொடங்கியுள்ளது.
- ஆக்ஸ்போர்டு அகராதியின் 2018 ஆம் ஆண்டிற்கான இந்தி வார்த்தையாக ‘நாரி சக்தி’ (‘Nari-Shakti’) எனும் வார்த்தை தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. இதன் பொருள் ‘பெண்களின் ஆற்றல்’ என்பதாகும். 2017 ஆம் ஆண்டு ‘ஆதார்’ (Aadhar) வார்த்தை தெரிவு செய்யப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
உலகம்
- சர்வதேச அளவில் பயணிகள் வருகை அதிகமுள்ள விமான நிலையங்களின் ஐக்கிய அரபு அமீரகத்தின் துபை சர்வதேச விமான நிலையம் தொடர்ந்து 5-ஆவது ஆண்டாக முதலிடத்தை தக்கவைத்துக் கொண்டுள்ளது. கடந்த 2018-ஆம் ஆண்டில் மட்டும் அந்த விமான நிலையத்துக்கு 8.9 கோடி பயணிகள் வந்து சென்றுள்ளனர்.
- தாயிடமிருந்து குழந்தைக்கு எச்.ஐ.வி பரவுதலை முற்றிலுமாக ஒழித்துள்ள முதல் ஆசிய - பசுபிக் நாடாக தாய்லாந்து அறிவிக்கப்பட்டுள்ளது.
- கரும்புச் சாற்றை (sugarcane juice ) தேசிய பானமாக (national drink) பாகிஸ்தான் நாடு 24-1-2019 அன்று அறிவித்துள்ளது.
வெளிநாட்டு உறவுகள்
- நேபாளத்துக்கு ஆம்புலன்ஸ், பேருந்துகள் பரிசளிப்பு : நாட்டின் 70-ஆவது குடியரசு தின விழாவையொட்டி, அண்டை நாடான நேபாளத்துக்கு 30 ஆம்புலன்ஸ் வாகனங்கள், 6 பேருந்துகளை இந்தியா பரிசளித்துள்ளது.
பொருளாதாரம்
- இணையவழி வர்த்தகத்தில் அந்நிய நேரடி முதலீட்டுக்கு மத்திய அரசு விதித்துள்ள கட்டுப்பாடுகள் பிப்ரவரி 1-ஆம் தேதியில் இருந்து அமலுக்கு வர உள்ளது. அதன்படி, ஆன்லைன் விற்பனை நிறுவனங்கள் தங்களிடம் உள்ள அனைத்து விற்பனையாளர்களுக்கும் பாரபட்சம் இல்லாமல் சேவை அளிக்க வேண்டும். தங்களிடம் மட்டுமே ஒரு நிறுவனத்தின் குறிப்பிட்ட பொருள் கிடைக்கும் என்ற நிலையை உருவாக்கி, அதிக விலையை நிர்ணயிக்கக் கூடாது. ஒரு விற்பனையாளர் தன்னிடம் உள்ள பொருள்களில் 25 சதவீதத்தை மட்டுமே ஆன்லைன் நிறுவனங்கள் மூலம் விற்க வேண்டும். தங்களிடம் மட்டுமே பொருள்களை விற்பனை செய்ய வேண்டும் என்று எந்த விற்பனையாளரையும் ஆன்லைன் நிறுவனங்கள் கட்டாயப்படுத்தக் கூடாது. தாங்கள் மட்டுமே ஒரு குறிப்பிட்ட பொருள் விற்பனை செய்கிறோம் என்பது போன்ற நிலையை ஏற்படுத்தக் கூடாது. "கேஷ் பேக்' என்ற பெயரில் தள்ளுபடி அளிக்கும்போது, வாடிக்கையாளர்களுக்கு ஏற்ப பாரபட்சம் காட்டக் கூடாது என்பது உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இது தவிர அந்நிய நேரடி முதலீட்டு விதிகளின்படி, அந்நிய முதலீட்டில் செயல்படும் ஆன்லைன் நிறுவனங்கள் இந்திய நிறுவனங்கள் மூலம்தான் பொருள்களை விற்க வேண்டும். ஆனால், அமேசான், பிளிப்கார்ட் ஆகிய நிறுவனங்கள் மறைமுகமாக தங்கள் நிதியை இந்திய நிறுவனங்களில் முதலீடு செய்து, அவற்றை தங்கள் வர்த்தகத்துக்கு பயன்படுத்துகின்றன.
நியமனங்கள்
- உலக சுகாதார நிறுவனத்தின் தென்கிழக்கு ஆசிய பிராந்திய இயக்குநராக (Regional Director WHO SOUTH EAST Asia) இந்தியாவைச் சேர்ந்த பூனம் கெத்ரபால் சிங் ( Dr. Poonam Khetrapal Singh) நியமிக்கப்பட்டுள்ளார்.
முக்கிய தினங்கள்
- சர்வதேச சுங்க தினம் ( International Customs Day ) - ஜனவரி 26 | மையக்கருத்து (2019) - தடையற்ற வர்த்தகம், போக்குவரத்து மற்றும் பயணத்திற்கான ஸ்மார்ட் எல்லைகள் (SMART borders for seamless Trade, Travel and Transport)
- சர்வதேச் பேரழிவு நினைவு தினம் (International holocaust remembrance day) - ஜனவரி 27 (இரண்டாம் உலகப் போரினால் ஏற்பட்ட பேரழிவுகளின் நினைவாக அனுசரிக்கப்படுகிறது.)
- தகவல் பாதுகாப்பு தினம் (Data Protection Day) - ஜனவரி 28
விருதுகள்
- சாகித்ய அகாதெமியின் மொழி பெயர்ப்பு விருதுகளில், தமிழ் மொழி பெயர்ப்புக்கான விருது கன்னியாகுமரி மாவட்டம், குளச்சல் மு.யூசுஃப்பிற்கு கிடைத்துள்ளது. ஜி.ஆர். இந்துகோபனின் "மணியன் பிள்ளையுட ஆத்ம கதா' எனும் மலையாள சுயசரிதையை "திருடன் மணியன்பிள்ளை' எனும் பெயரில் தமிழில் மொழியாக்கம் செய்ததற்காக இந்த விருது வழங்கப்பட்டுள்ளது.
- இவர் தவிர, சிறுகதைகளின் தொகுப்பை ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்த சுபஸ்ரீ கிருஷ்ணமூர்த்தி, ஒடிய மகாபாரத கவிதைகளை ஹிந்தியில் மொழியாக்கம் செய்த பிரபாத் திரிபாதி, ஆங்கில மகாபாரத கதையை கன்னட த்தில் மொழி பெயர்ப்பு செய்த மறைந்த கிராடி கோவிந்த்ராஜு, சம்ஸ்கிருத ஸ்ரீமத் வால்மீகி ராமாயணம் கவிதைகளை மலையாளத்தில் மொழிபெயர்ப்பு செய்த எம். லீலாவதி, தோக்ரி மொழிக் கவிதைகளை தெலுங்கில் மொழியாக்கம் செய்த ஏ. கிருஷ்ணா ராவ் ஆகியோரும் தேர்வு செய்யப்பட்டுளளனர்.
- ’இலக்கிய மொழிபெயர்ப்பிற்கான ரொமைன் ரோலண்ட் புத்தக பரிசு’ (Romain Rolland Book Prize for literary translation) பிரஞ்சு மொழியிலிருந்து தமிழில் மொழி பெயர்க்கப்பட்ட , ஆண்ட்ரே மாகினே எழுதிய ‘லா வி டூன் ஹோமே இன்கோனு’ (“La vie d’un homme inconnu” (The Life of an Unknown Man)) என்ற புத்தகத்தின் தமிழ் மொழிபெயர்ப்பிற்கு வழங்கப்பட்டுள்ளது. இந்த புத்தகத்தை தமிழில் எஸ்.ஆர்.கிருஷ்ணமூர்த்தி மொழிபெயர்த்து காலச்சுவடு பதிப்பகம் வெளியிட்டுள்ளது.
விளையாட்டுக்கள்
- இந்தோனேசியா மாஸ்டர்ஸ் 2019 (DAIHATSU Indonesia Masters 2019) போட்டியில் வெற்றி பெற்றோர் விவரம் :
- பெண்கள் ஒற்றையர் - சாய்னா நெய்வால் | இரண்டாமிடம் - கரோலினா மாரின் (ஸ்பெயின்)
- ஆண்கள் ஒற்றையர் - ஆண்டர்ஸ் ஆண்டோன்சென் ( Anders Antonsen) (டென்மார்க்) | இரண்டாமிடம் - கெண்டோ மோமாடா(Kento Momota) (ஜப்பான்)
- ஆண்கள் இரட்டையர் - மார்க்கஸ் ஃபெர்னால்டி கிதியோன் மற்றும் கெவின் சஞ்சயா சுகாமுல்ஜோ (இந்தோனேசியா) | இரண்டாமிடம் - முகமது ஆஷான் மற்றும் ஹெண்ட்ரா செடியாவன் (இந்தோனேசியா)
- பெண்கள் இரட்டையர் - அயாகா தகாஹாஷி மற்றும் மிஷாகி மாட்சுடோமோ (ஜப்பான்) | இரண்டாமிடம் - ஷோ இயாங் மற்றும் கோங் கீ யங் (தென் கொரியா)
- கலப்பு இரட்டையர் - ஷெங் சிவேய் மற்றும் ஹாங் யாகியாங் (சீனா) | இரண்டாமிடம் - டோண்டோவி அஹமது மற்றும் லிலியானா நாட்சிர் (இந்தோனேசியா)